பெங்களூரில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டுகளை கூறிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விஞ்ஞானிகளுடன் உரையாற்றினார். அப்போது சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கிய இடம் ‘சிவசக்தி’ என அழைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தலத்தில் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான்-3, கடந்த 23ம் தேதியன்று மாலை தென் துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
தற்போது விக்ரம் லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. இந்த ரோவர் 14 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
சந்திரயான்-3, விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்பட்டதை தென்னாப்ரிக்காவில் இருந்து நேரலையில் பார்வையிட்ட இந்திய பிரதமர் மேடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா சென்ற பிரதமர் மோடி, மாநாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேரடியாக கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து இன்று இந்தியா திரும்பினார்.
பெங்களூரு HAL விமான நிலையத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் கர்நாடக அரசு அதிகாரிகள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு வழி நெடுக கட்சியினர் சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
தொடர்ந்து இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து சேர்ந்த பிரதமரை இஸ்ரோ தலைவர் சோம்நாத் வரவேற்றார். பின்னர் இஸ்ரோ அலுவலகத்தில் உள்ள கட்டளை மையத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநர் வீரமுத்துவேல் தலைமையிலான விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.
பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி விஞ்ஞானிகளுடன் உரையாற்றினார். அப்போது சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயரிட முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். “இந்த சக்தி என்பது பெண்களின் சக்தியும் கூட” “சந்திரயான்-3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக உள்ளது, எனவே சிவசக்தி என்ற பெயர் அவர்களின் அர்ப்பணிப்பிற்கும் ஒரு சாட்சி என கூறினார்.
அதேபோல லேண்டர் தரையிறங்கிய தினம் தேசிய விண்வெளி தினமாகவும் கொண்டாடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விழுந்த இடம் திரங்கா (மூவர்ணக்கொடி) என்று அழைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், எந்த தோல்வியும் நிரந்தரமில்லை என்பதை குறிப்பிடவே இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று கூறினார்.