விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் (prabhakaran) குறித்து வெளியிட்ட தகவல் தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்த உளவுப் பிரிவினர் முடிவு செய்து உள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் (prabhakaran) உயிருடன் தான் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவரது இந்த கருத்திற்கு உடனடியாக இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்தது.
ஆனால், நெடுமாறனின் இந்த கருத்தை முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது என்பதால், பிரபாகரன் பற்றிய தகவல்களை மீண்டும் திரட்ட வேண்டும் என மத்திய உளவு பிரிவினர் உத்தரவிட்டு உள்ளனர்.
இந்நிலையில், பிரபாகரன் தொடர்பான தகவல்களை தமிழக கியூ பிரிவு காவல் துறையினரும் திரட்டத் தொடங்கி உள்ளனர். இதற்காக, தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அப்பிரிவு ஐ.ஜி.செந்தில்வேலன், கியூ பிரிவு எஸ்.பி.கண்ணம்மாள் தலைமையிலான காவல் துறையினர் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, தற்போது பிரபாகரன் மரணமடைந்ததாக முன்னதாக திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் மீண்டும் கையிலெடுக்கப்பட்டு புலனாய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என வெளியிட்டது தொடர்பாக நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தவும் உளவுப் பிரிவினர் முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக, தற்போது நெடுமாறன் மற்றும் அவருடன் தொடர்பில் இருப்பவர்களின் நடமாட்டம் உளவுப் பிரிவினரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.