புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், இன்று மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவரது பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதை அடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய நிலையில், 29 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக சார்பில் ஒடிசாவின் பழங்குடியினத்தை சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் எதிர்கட்சிகள் சார்பில் மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா போட்டியில் களமிறங்குகிறார். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 29ம் தேதி கடைசி நாள் என்பதால் இன்று யஷ்வந்த் சின்கா வேட்பு மனு தாக்கல் செய்கிறார். பீகாரை சேர்ந்த யஷ்வந்த் சின்கா ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்ததுடன், வாய்பாஜ் பிரதமராக இருந்த போது மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.