ஆசிரியர் தினமான இன்று டெல்லி விக்யான் பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார் .
ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பணிகளைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வரு ஆண்டும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவராவர்.
மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகியோருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுபெறும் ஆசிரியர்களுக்கு டெல்லி விக்யான் பவனில் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.
தேசிய நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.