திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பள்ளி முதல்வர் மற்றும் செயலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருபவர் அதே பகுதியைச் சேர்ந்த பொன்சிங். இவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக பள்ளி மாணவிகள் 5 பேரை தூத்துக்குடி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
Also Read : மணிப்பூரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 11 பேர் சுட்டுக்கொலை..!!
இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து பெற்றோர்களிடம் கூற பெற்றோர்கள் கொடுத்த புகாரில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங்கை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் செயலர் கைது செய்யப்பட்டு மூவரிடமும் போலீசார் தனித்தனியே விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.