கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி. இவர் கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.
இதன்மூலம் தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும், இந்தியளவில் 3வது வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்று அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள வைத்துச் செய்தியில்,
“தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துகள். செஸ் வீராங்கனை வைஷாலியின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வைஷாலியின் வெற்றிப்பயணம், செஸ் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும். கிராண்ட்மாஸ்டர் உடன்பிறப்புகளாக நீங்களும் உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவும் வரலாறு படைத்துள்ளீர்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அதில், வாழ்த்துக்கள் வைஷாலி. இங்கிலாந்தில் நடைபெற்ற பிட் மகளிர் கிராண்ட் ஸ்விஸ் 2023 இல் அவரது வெற்றியில் தமிழ்நாடு பெருமை கொள்கிறது. 2024 இல் நடைபெறவுள்ள செஸ் கேண்டிடேட் தொடருக்கு தகுதி பெற்ற முதல் சகோதர-சகோதரி ஜோடியாக வரலாறு படைத்த வைஷாலி மற்றும் பிரக்ஞானந்தா தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இடம் பெறுவதற்காக கனடாவில் நடைபெற உள்ள கேண்டிடேட் தொடரில் உடன்பிறப்புகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்க பதிவில்,
இந்தியாவின் 84 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள தமிழக செஸ் வீராங்கனை சகோதரி @chessvaishali அவர்களுக்கு, @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய அளவில் மூன்றாவதாகவும், தமிழக அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராகவும் சாதனை படைத்துள்ள சகோதரி @chessvaishali அவர்கள், உலக அரங்கில் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.