ஜூன் 24 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 97.95 % மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்து உள்ளது.
மேலும் பொதுத்தேர்வில் பங்கேற்காத 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ம் தேதியும், 10ம் வகுப்பிற்கு ஆகஸ்ட் 2ம் தேதியும் தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் 24ம் தேதி காலை 11 மணி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வு எழுதிய பள்ளிகள் வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டத்துக்குக் குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில், 110 மையங்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை இவ்வாறு அறிவித்துள்ளது.