புதுச்சேரியில் (puducherry), கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவினர் பெண்ணின் பிறப்புறுப்பில் உடைந்த ஊசியை வைத்து தைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால், உடலில் சில சிக்கல்கள் உடன் அந்த குழந்தை பிறந்ததால் அந்த பெண் ஐசியூ விற்கு மாற்றப்பட்டார். இதனிடையே, டிசம்பர் 13ஆம் தேதி அந்த பெண்ணுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் உடைந்த ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே, இதுகுறித்து அந்த பெண்ணிடமும் அவருடைய குடும்பத்தினரிடமும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் அறுவை சிகிச்சை மூலம் உடைந்த ஊசியை அகற்றுவதற்கான ஒப்பந்தத்தில் மட்டும் கையெழுத்து பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
இதனை அடுத்து மூன்று மணி நேரம் நிகழ்ந்த அந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்தது. ஊசியின் உடைந்த பாகம் தனது உடலில் இருந்ததால் பெரும் அவதியை எதிர் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கடலூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், உடைந்த ஊசி பெண்ணின் பிறப்புறுப்பில் பதிந்திருந்ததை ஒப்புக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் அந்த பகுதியில் ஏற்பட்ட அலர்ஜியின் காரணமாக அறுவை சிகிச்சையின்போது ஊசியை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
பிறப்புறுப்புக்கு அதிக சேதம் ஏற்படாமல் இருக்க தற்காலிகமாக ஊசியை அகற்றாமல் விட்டு விட்டு மூன்று மாதத்திற்கு பிறகு இந்த பிரச்சனையை சரிசெய்ய முடியுமெனவும் பெண்ணின் குடும்பத்தினருக்கு மருத்துவ குழுவினர் புரிய வைத்து கையெழுத்தையும் பெற்றுக் கொண்டனர்.
மேலும் அந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தனர். இதனையடுத்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் விசாரணை ஆணையம் (puducherry) அந்த பெண்ணுக்கு இழப்பீடாக ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்றும் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்காக ரூபாய் 2 லட்சமும், வழக்கு செலவிற்காக ரூபாய் 25 ஆயிரம் தனியார் மருத்துவமனை செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.