தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பேராசிரியர் கண்டித்தால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் கணேசன்- மாடத்தி தம்பதி. இவர்களது 18 வதான மகள் இந்து பிரியா டி.என்.புதுப்பட்டியில் உள்ள கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில், சக மாணவிகளின் செல்போனை வைத்து இந்து பிரியா விளையாடி கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட கல்லூரியில் பணிபுரியும் ஒரு பேராசிரியர் மற்றும் ஒரு பேராசிரியை, அவரை கண்டித்துள்ளனர்.
மேலும், கடந்த சில நாட்களாக அவரை மன்னிப்பு கடிதம் எழுதித் தரும்படி வற்புறுத்தி வந்துள்ளனர். தொடர்ந்து, அவரிடம் மன்னிப்புக் கடிதமும் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மாணவி இந்து பிரியா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை வீட்டில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
இது குறித்து புளியங்குடி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்ட்டதை அடுத்து உடலை மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பாக மாணவி எழுதிய 2 பக்க கடிதத்தை கைப்பற்றிய போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தான் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது இறப்புக்கு கல்லூரி பேராசிரியர் மற்றும் பேராசிரியை தான் காரணம் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, மாணவி தற்கொலைக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.