இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 வது ஆஷஸ் (Ashes) டெஸ்ட் போட்டி ஓல்ட் டிரபோர்ட் மைதானத்தில் தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஆரம்பம் முதலே தடுமாற்றமானது, இருப்பினும் மத்திய வரிசை வீரர்கள் ஸ்மித், லாபூஸ்சக்னே, மார்ஷ், ஹெட் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி அணியின் நிலைமையை சரி செய்தனர். ஆனால் முடிவில் 317 மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸ்சில் பேட்டிங் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் அதிரடியால் 592 ரன்கள் சேர்த்து வலுவான நிலையை அடைந்தது.
முதல் இன்னிங்ஸ் முடிவில் 275 ரன்கள் பின்தங்கியது ஆஸ்திரேலிய அணி, இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மீண்டும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை வரிசையாக பெவிலியனுக்கு அனுப்பினர். வார்னர், கவாஜா, ஸ்மித், ஹெட் என முக்கிய பேட்ஸ்மேன்கள் வரிசையாக அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். ஆனால் ஒரு முனையில் நிதானமாக விளையாடிய லபுஸ்சஃனே அணியை சரிவிலிருந்து மீட்டார். இவருடன் ஜோடி சேர்ந்த மார்ஷ் பார்ட்னெர்ஷிப் அமைக்க நிலைமை சற்று சரியானது.
சிறப்பாக விளையாடிய லபுஸ்சஃனே சதமடித்து அசத்தினார். 173 பந்துகளில் 111 ரன்கள் குவித்து தேநீர் இடைவேளைக்கு முன்பாக ரூட் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனை தொடர்ந்து தேநீர் இடைவேளை எடுத்த வேளையில் மழை வர தொடங்கியது. தொடர்ந்து அதிகமாக மழை பெய்ததால் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவதாக நடுவர்கள் தெரிவித்தனர்.
4ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 214 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து அணியை விட 61 ரன்கள் பின் தங்கியுள்ளது. மீதம் ஒரு நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய நிதானமாக விளையாடி போட்டியை டிரா செய்யும் நோக்கிலுள்ளது. இறுதி நாளான இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது. எனினும் இன்று போட்டி தொடங்கியதும் இங்கிலாந்து பந்து வீச்சளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை விரைவில் விக்கெட் எடுத்து, குறைவான ரன்களை டார்கெட்டாக அமைக்க முனைப்பாக இருப்பார்கள்.