ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தன்னிடம் இருந்த லட்சக்கணக்கான பணத்தை சாலையில் விசிறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வெப் சீரியஸ்தான் ‘மணி ஹெய்ஸ்ட்’. ஒரு கும்பல் வங்கிகளில் எப்படி பணத்தை கொள்ளையடிகிறார்கள் என்பது தான் இந்த வெப் சீரியஸின் கதை.
அந்த வெப் சீரியஸின் ஒரு காட்சியில், தாங்கள் கொள்ளையடித்த பணத்தின் ஒருபகுதியை போலீஸாரிடம் இருந்து தப்பிப்பபதற்காக ரோட்டில் வீசுவார்கள். இதை எடுக்க மக்கள் கூட்டம் சேருவதை சாதகமாக்கி கொள்ளை கும்பல் தப்பிவிடுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அதே போன்ற காட்சியை ராஜஸ்தானில் இளைஞர் ஒருவர் நேற்று செய்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா நகரில் காரில் வந்த, மணி ஹெய்ஸ்ட்’ சீரியஸில் கொள்ளைக் கும்பல் அணிந்திருப்பதை போலவே உடையையும், முகமூடியையும் போட்டிருந்த நபர் ஒருவர், திடீரென காரை நிறுத்தி மேலே ஏறி நின்றார்.
பின்னர் தனது பையில் இருந்த பணக்கட்டுகளை பிரித்து சாலையில் வீச, இதனை பார்த்த மக்கள் முண்டியடித்துக் கொண்டு பணத்தை எடுத்தனர். பணத்தை எடுக்க மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்த தகவல் கிடைத்த போலீஸார் சமபவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நபரை கைது செய்து, யார் அந்த இளைஞன், வீசிய பணம் யாருடையது, என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.