நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று திடீர் மரணமடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் X தலத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் மாரிமுத்து. மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.
2011-ல் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வாலி, உதயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். 57 வயதான இவர் தற்போது வெளியான ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சினிமாவில் இருந்து சமீபத்தில் சின்னத்திரைக்கு வந்த இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் வில்லனாக நடித்தார்.
இந்த சீரியல் இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொடுத்தது. மதுரை தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. சீரிய பகுத்தறிவாதியாக திகழ்ந்து டிவி விவாதங்களிலும் அதனை முழுமையாக வலியுறுத்தி பேசிவந்தார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக உயிழந்தார். இன்று காலை வளசரவாக்கத்தில் ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் இருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் மாரடைப்பு காரணமாக, உயிரிழந்தார்
நடிகர் மாரிமுத்துவின் உடல், விருகம் பாகத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் இன்று மாலை, அவரது சொந்த ஊரான தேனிக்கு உடல் கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் திடீர் மரணத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், “மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி” என்று பதிவிட்டிருந்தார்