நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு (Jallikattu) போட்டியில் மின்சார வேலியில் சிக்கிய காலை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தகவல் அறிந்து வந்த போலீசார் ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மங்களபுரம் அருகில் உள்ள பகுதியில் இன்று காலை 8 மணியளவில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில், மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, ஆயில்பட்டி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டுள்ளன.
இந்நிலையில், வாடிவாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முயன்ற போது காலை ஒன்று அருகில் இருந்த விவசாய நிலத்திற்குள் சென்றுவிட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கிய காளை மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அனுமதி இன்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு (Jallikattu) போட்டியை தடுத்து நிறுத்தினர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு நடைபெறுவதாகத் தகவல் வந்ததால் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து வைத்துள்ளனர். காளை உயிரிழந்தது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றும், அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.