ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருட்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.
பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும் வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும் போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை என்றும் என இதன் காரணமாக அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசியப் பொருட்கள் வழங்க அனைத்து நியாய விலைக் விற்பனையாளர்களுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.
அதில் பரவலாக இணைய இணைப்பு / தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பண்டங்கள் தரமாக விநியோகம் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும் நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.