உ.பி மாநிலத்தின் ஹத்ராஸில் நடைபெற்ற மத வழிபாட்டுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது .
உத்திர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் அருகே உள்ள ரதிபன்பூரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது .
இந்த கூட்டத்தில் ஏராளமான பெண்களும் வயதானவர்க்ளும் கலந்துகொண்டதாக சொல்லப்படும் நிலையில் கூட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர் .
இந்த வழிபாட்டு கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சரியான முன்னேற்பாடுகள் செய்யமால் போன காரணத்தால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்க ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வரவே நீண்ட நேரம் ஆனதாகவும் தகவல் வெளியானது .
இவை அனைத்தும் கண்சிமிட்டும் நேரத்தில் நடந்து முடிய இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய இதுவரை சுமார் 127 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
இதுமட்டுமின்றி இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய பலர் தற்போது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உ.பி மாநிலத்தை உலுக்கி உள்ள இந்த சோக சம்பவத்திற்கு தற்போது பிரதமர் மோடி மற்றும் அணைத்து மாநில முதல்வர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்துதலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.