தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் உயர்கல்வி பயில ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கபட்டுள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது 2ம் ஆண்டில் பயணிக்கும் திமுக அரசு பல்வேறு புதிய அறிவிப்பிகளை வெளியிட்டு வருவதோடு மட்டும் இன்றி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்களை செய்து அதனை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
அது மட்டுமின்றி, மாணவிகள் வேறு கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும், இந்த உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதற்கான திட்டத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக அறிவிக்கபட்டுள்ளது.
ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பின்னர் ஜூலை 10ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் தங்கள் பள்ளி அல்லது கல்லூரிகள் மூலம் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது www.penkalvi.gov.in என்ற இணையதளம் மூலம் மாணவிகள் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி உதவித் தொகை திட்டம் தொடர்பான தகவல்களைக் கட்டணமில்லா 14417 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.