தமிழகத்தில் 2.70 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது 2ம் ஆண்டில் பயணிக்கும் திமுக அரசு பல்வேறு புதிய அறிவிப்பிகளை வெளியிட்டு வருவதோடு மட்டும் இன்றி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்களில் புதிய மாற்றங்களை செய்து அதனை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்று மாற்றி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன் படி மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து. இத்திட்டத்தின்கீழ், 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அது மட்டுமின்றி, மாணவிகள் வேறு கல்வி உதவித் தொகை பெற்று வந்தாலும், இந்த உதவித் தொகையும் வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.
தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை https://studentsrepo.tn, https://schools.gov.in என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.