சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.
நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று ( நவ 16 ) மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. 17 ஆம் தேதி நாளை காலையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். 41 நாட்கள் நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும்.
டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும்.
மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் சுமார் 7,500 போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.