சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் சேலம் மாநகரப் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலை புனரமைத்து தரவேண்டும் என சேலம் மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில் தமிழ்நாடு அரசு கோவில் திருப்பணிகளுக்கு ரூ.4.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து ஆகம விதிகளின்படி பழமை மாறாமல் புதிதாக பல்வேறு அழகிய சிற்பங்களுடன் கூடிய கருவறை கட்டப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து குடமுழுக்கு விழா, கடந்த அக். 18-ஆம் தேதி கணபதி ஹோமம், முளைப்பாலிகை இடுதலுடன் தொடங்கியது.
புதன்கிழமை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவஜனம், அக்னி சங்கரணம், சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து இன்று அதிகாலை 4.30 மணிமுதல் காலை 7.30 மணி வரை நான்காம் கால வேள்வி வழிபாடு, காலை 7.40 மணி முதல் காலை 8 மணி வரை ராஜகோபுரம், கருவறை விமானம், பரிவார சன்னிதி விமானம் மற்றும் கொடிமரத்துக்கு சமகாலத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.
தொடா்ந்து காலை 8.30 மணி முதல் மகா கணபதி, பெரிய மாரியம்மன், மதுரை வீரன் சுவாமிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.