சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆலோசைக் கூட்டத்தில் 500 கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெய்து வரும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்தவரையில் இன்று தக்காளியின் விலை 180 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் மதுரையில் தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யபடுகிறது.
இவ்வாறு தமிழ் நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் ரேஷன் கடைகளில் தக்காளி ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் தக்காளி விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஆலோசைக் கூட்டத்தில் 500 கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மேலும் 200 கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், ”தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றும் தொடர்ந்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
உற்பத்தி குறைவு காரணமாக தக்காளி விலை அதிகரித்துள்ளதாக கூறிய அவர், நாள் ஒன்றுக்கு நியாயவிலைக் கடைகளில் சராசரியாக 50 கிலோ என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மொத்தமாகப் பண்ணைப் பசுமை கடைகளின் மூலமாக மற்ற இடங்களில் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.