தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக சி.ஐ.டி.யூ மாநில தலைவர் செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
முறையான ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்கம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் சாம்சங் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுதொடர்பாக அமைச்சர்கள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தொழிற்சங்கம் அமைப்பது ஒன்றைத் தவிர மற்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தொழிற்சங்கம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து சிஐடியு போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று இப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
இதுகுறித்து செய்தியாளர்களிடம் செளந்தரராஜன் அளித்த பேட்டியில் கூறிருப்பதாவது :
4 அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம். நாளை எங்களது பேரவைக் கூட்டம் நடக்க உள்ளது. அதில் நல்ல முடிவு எடுக்கப்படும்
Also Read : சென்னை வாசிகள் கவனத்திற்கு – சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம்..!!
நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும் இடையே ஒரு தொடர்பு, இந்த பேச்சுவார்த்தையால் ஏற்பட்டுள்ளது. எதையும் ஒத்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறிய நிர்வாகம், அமைச்சர்களின் அழுத்தத்தால் தற்போது பேச முன்வந்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுகள்
தொழிற்சங்கப் பதிவு அங்கீகாரம் என்பது எங்களது உடனடி கோரிக்கையெல்லாம் இல்லை. சங்க அங்கீகாரத்தையும், சங்கம் பதிவு செய்வதையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். இன்று நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளித்துள்ளது என செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.