தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுகவினரே சட்டம் ஒழுங்கை சீரழித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறிருப்பதாவது :
தமிழக மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்றால் என்ன? என்ற கேள்விக்கு விடை தெரியாத அளவுக்கு இன்றைக்கு நாளுக்கு நாள் சட்ட விரோத செயல்களையும், கட்டப்பஞ்சாயத்துகளையும் திமுகவினரே அரங்கேற்றி, தமிழகத்தின் பொது அமைதியை சீர்குலைத்து வருவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், சமூக விரோதிகள் போன்றோர் தமிழகத்தில் எங்கு இருக்கிறார்கள் என்று தேடி பார்க்கின்ற வகையில் இரும்பு கரம் கொண்டு சட்டம் ஒழுங்கை காப்பாற்றினார்கள். ஆனால் இன்றோ கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத செயல்கள், போதை பொருட்கள் கடத்துவது போன்று தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் அனைத்து பாதகமான செயல்களிலும் இன்றைக்கு திமுகவினரே ஈடுபடுவதை, கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில்தான் இன்றைய திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
திமுகவினரின் நிர்வாக திறமையின்மையால், சட்டம் ஒழுங்கை காக்க தவறியதால், ஏழை எளிய சாமானிய மக்கள் முற்றிலுமாக பாதிக்கப்படுகிறார்கள். இன்றைக்கு திமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசலால் மக்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.
கன்னியாகுமரியில் திமுக மாவட்ட செயலாளராக உள்ள மகேஷ் மற்றும் பால்வளத்துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜுக்கும் இடையே நாள்தோறும் நடக்கும் பிரச்னைகளால் மக்கள் படும் அல்லல்கள்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக
இருக்கும் ராஜகண்ணப்பன் அவர்களும், ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினரான நவாஸ் கனி அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த இடத்தில் மாவட்ட ஆட்சியரை பிடித்து கீழே தள்ளிவிடும் அளவுக்கு ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுகொண்டு கல்வி கற்கும் மாணவச்செல்வங்களுக்கு வன்முறை கலாச்சாரத்தை கற்றுக்கொடுப்பது.
திருநெல்வேலியில் மத்திய மாவட்ட செயலாளராக இருந்த அப்துல் வஹாப் அவர்களுக்கும், திருநெல்வேலி மேயர் சரவணன் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலால் அவர்களுடைய ஆதரவாளர்கள் மாநகராட்சி கூட்டங்களிலேயே வெளிப்படையாக மோதிக்கொண்டது.
திருச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருக்கக் கூடிய கே.என்.நேரு அவர்களுக்கும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான சிவா அவர்களுக்கும் உள்ள கருத்து வேறுபாடால் அவர்களின் ஆதரவாளர்கள் பொதுவெளியில் சண்டை போட்டு கொண்டதை நாடே பார்த்தது.
துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லுார்து பிரான்சிஸ் அவர்களை அரசு அலுவலகத்திலேயே பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்ததால், தமிழகத்தில் அரசு அலுவலர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் வசித்து வரும் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவர்களின் வீட்டை திமுகவினர் அடித்து நொறுக்கி, வாகனத்துக்கும் தீ வைத்து கொளுத்தியிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் அங்கு இருந்த பாதிரியாரை ஓட ஓட விரட்டி அடிக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத், சட்ட விரோதமாக மணல் கடத்தல், பெண்களிடம் செயின் பறிப்பு, சாலையில் அமர்ந்து கடை நடத்தும் அப்பாவி மக்களையும் விட்டு வைக்காமல் பணம் வசூலிப்பது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்கள் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு இருக்கிறது.
இதுபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், திமுகவினர் நாள்தோறும் செய்யும் அராஜகங்களையும், இதன் காரணமாக அரசு அலுவலர்கள், வியாபாரிகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துதரப்பு மக்களுக்கு ஏற்படும் பாதகங்களையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழக மக்கள் நடப்பதையெல்லாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அடுத்து வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினரையும், அவர்களை. நம்பிக்கொண்டு இருப்பவர்களையும் புறக்கணிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.
திமுகவினருக்கு தக்க பாடம் புகட்ட காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் தன் சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாமல் திணறும் திமுகவோ பதினைந்து கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏதோ சாதிக்க போகிறோம் என்று வீர வசனங்கள் பேசுவது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
திமுக என்ற கட்சி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அவர்கள் ஆளுங்கட்சியாக இருந்துகொண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பதும், பொதுமக்களுடைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதும் எந்த விதத்தில் நியாயம்?
எனவே, திமுக தலைமையிலான அரசு நாள்தோறும் நடக்கின்ற அத்துமீறல்களையும், அராஜகங்களையும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தவறு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், தமிழக மக்களும் அச்சமின்றி வாழும் வகையில் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.