பரங்கிப்பேட்டையில் இருந்து 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்ற பள்ளி வாகனம் தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர், சிதம்பரத்தை அடுத்துள்ள துணி சரமேடுவில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க வருகிறார்கள். இந்த மாணவர்களை தினமும் அழைத்துவர தனியார் பள்ளி சார்பில் பேருந்து, மற்றும் வேன் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காலை பரங்கிப்பேட்டையில் இருந்து 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து சென்று கொண்டிருந்தது.
அந்த பேருந்தின் ஓட்டுனர் முருகன் ஓட்டி சென்ற இந்த பேருந்து, பி.முட்லூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனை சுதாகரித்துக் கொண்ட ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதும், உடனே மினிபஸ்சில் இருந்த 30 மாணவர்களும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் மாணவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினார்கள்.
இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ½ மணிநேரம் போராடி அணைத்தனர். அதற்குள் மினிபஸ் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது.