கர்நாடகாவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பகத் சிங் (bhagat singh) போல் வேடமணிந்து ஒத்திகையில் ஈடுபட்ட சிறுவன் தூக்கு கயிற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிகளில் குடியரசுத் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போது சிறபபு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று.
அதுபோன்று, கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சஞ்சய் கௌடா என்ற மாணவன் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், வரும் நவம்பர் ஒன்று கர்நாடக உதயமான தினம். அந்த உதயமான தினத்தை முன்னிட்டு பள்ளியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும், பள்ளி விழாவில் கலந்து கொள்வதற்காக சஞ்சய் கௌடா பகத் சிங் வேடத்தில் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
எனவே, கடந்த ஒரு வாரமாகவே நாடகத்திற்கான ஒத்திகை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்நிலையில், பள்ளியில் நடந்த ஒத்திகையை போலவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பகத் சிங்கை (bhagat singh) தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் கௌடா ஒத்திகை பார்த்துள்ளார்.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக தூக்கு கயிற்றில் சிக்கிக்கொண்டு சஞ்சய் கௌடா உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, வெளியே சென்றிருந்த மாணவன் சஞ்சய் கௌடாவின் பெற்றோர் வீட்டில் வந்து பார்த்த போது தூக்கு கயிற்றில் மகன் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி துடித்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாடகத்திற்கான ஒத்திகையின் போது சிறுவன் எதிர்பாராமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.