ஆம்பூர் அருகே தடுப்புச் சுவர் மீது மோதி மேம்பாலத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள மாதகடப்பா மலை கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். 22 வயது நிரம்பிய இவர் சேத்துப்பட்டில் தனியார் பேக்கரியில் பணிபுரிந்து வருகிறார்.
பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்த திலீப்குமார் விடுமுறை முடிந்து நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் அவரது உறவினரான 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீகாந்தை அழைத்துக்கொண்டு சேத்துப்பட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது வாகனம் நிலை தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த மாணவன் ஸ்ரீகாந்த் தூக்கி வீசப்பட்டு 50 அடி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் மாணவன் ஸ்ரீகாந்த் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயங்களுடன் திலீப் குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இதனை அடுத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்புச் சுவர் மீது மோதி மேம்பாலத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.