அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் மிஸ்ராவின் பதவியை நீட்டிக்க அவசியம் என்ன..? பாசிச பாஜக அரசின் ஒட்டுமொத்த எதேச்சதிகாரச் செயல்பாட்டின் ஒற்றை வடிவம் சஞ்சய் குமார் மிஸ்ரா என்பதால் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவுக்கு பாஜக அரசு மூன்றாவது முறையாக வழங்கிய முறைகேடான பதவி நீட்டிப்புக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், அவரது நியமனம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது இந்திய உச்சநீதிமன்றம்.
அமலாக்கத்துறை இயக்குநரின் நியமனமே சட்டவிரோதம் எனில், சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட இயக்குநரின் உத்தரவுப்படி அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள், எடுத்த கைது நடவடிக்கைகள் அனைத்துமே சட்டவிரோதமானது இல்லையா? அவையெல்லாம் தொடருமா? அல்லது ரத்து செய்யப்படுமா? உள்துறை அமைச்சர் அமித்ஷா அமலாக்கத்துறை எந்தவொரு தனிநபரையும் சார்ந்ததல்ல என்று கூறியுள்ளார். அப்படியென்றால் சஞ்சய் குமார் மிஸ்ரா தனிநபர் இல்லையா?
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? பாசிச பாஜக அரசின் ஒட்டுமொத்த எதேச்சதிகாரச் செயல்பாட்டின் ஒற்றை வடிவம் சஞ்சய் குமார் மிஸ்ரா என்பதால் பதவி நீட்டிப்பு செய்யப்பட்டதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.