பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சத்ய அரிச்சந்திரன்களா? அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துமா? என காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில் கூறிருப்பதாவது :
ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை, புலனாய்வு அமைப்புகளை தொடர்ந்து, தீவிரமாக தவறாக பயன்படுத்தி வருகிறது.
பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கும் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீது நியாயமின்றி, தன்னிச்சையாக சோதனை என்ற பெயரில் அமலாக்கத்துறையை பயன்படுத்தி ஒன்றிய அரசு மனரீதியாக நெருக்கடி கொடுக்கிறது.
அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்தும் முக்கிய நோக்கம், தனது ஊழலை மறைக்கவும், எதிர்க்கட்சிகளின் புகழை அழிப்பதும், பா.ஜ.க.வை கொள்கைரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்க்கிற சக்திகளை பலவீனப் படுத்துவதற்காகத்தான்.
பா.ஜ.க.வின் அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மாவுடன் தொடர்புடைய பிரைட் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கிசான் சம்பதா திட்டத்தின் ஒரு பகுதியாக உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகத்திடம் இருந்து முறைகேடாக ரூபாய்10 கோடி மானியம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்து, அது பற்றிய செய்திகள் நேற்று 13.09.2023 வந்துள்ளது. ஒன்றிய அரசின் திட்டங்கள் பா.ஜ.க.வினரையும், அவர்களின் நண்பர்களையும் வளப்படுத்துவற்காக மட்டுமே உள்ளதா?
சில நாட்களுக்கு முன், ஒன்றிய சி.ஏ.ஜி. வெளியிட்ட தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இவர்களைப் போன்றவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்துமா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் சத்ய அரிச்சந்திரன்களா? என செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.