திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் பின் சக்கரம் கழன்று சாலையில் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இவர்களை பள்ளிக்கு அழைத்து செல்லவும், வீடுகளில் விடவும் 10 பள்ளி பேருந்துகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பள்ளி பேருந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லும் வழியில் பொன்னாபுரம் பகுதியில் பேருந்தின் பின் பக்க சக்கரங்கள் இரண்டும் சாலையில் கழன்று ஓடிய நிலையில் சக்கரம் இல்லாமல் பள்ளிப்பேருந்து சுமார் 200 மீட்டர் தரையில் உரசியபடி ஓடி நின்றது.
இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் லேசான காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம், பெற்றோர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது பள்ளிகள் அனைத்தும் தற்போது வழக்கம் போல் இயங்க துவங்கி இருக்கின்ற நிலையில் முன்பு போல மாணவர்களை அழைத்து வரக்கூடிய பள்ளி வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தப்பட தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.