இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மும்மரமாக விளையாடி வருகிறது . இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது .
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது .
இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய நிசாங்கா 43 ரன்னிலும், கருணாரத்னே 52 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர் .அவர்களை தொடர்ந்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் அபாரமாக விளையாடி 78 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 44 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்தது . இதையடுத்து 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது .
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய குர்பாஸ் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து அதிர்ச்சி கொடுத்தார் . இதையடுத்து களம் இறங்கிய ஹஷ்மத்துல்லா ஷாகிடி, ஜட்ரான் இணை நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தினர்.
அணியை வெற்றிபெற செய்ய பொறுப்புடன் ஆடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். ஆனால் ஜட்ரான் 54 ரன்னிலும் , ஷாகிடி 57 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் .
இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவகரும் இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனால் இலங்கை அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் இலங்கை அணி சமன் செய்தது.
முதல் ஒருநாள் போட்டியில் சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தான் அணியிடம் இலங்கை அணி வீழ்ந்தால் ஏமாற்றத்திலும் , வருத்தத்திலும் இருந்த இலங்கை ரசிகர்கள் இந்த வெற்றியின் மூலம் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர் .
இந்நிலையில் இந்த இரு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. அந்த போட்டியில் வென்று இலங்கை அணி தொடரை கைப்பற்றுமா இல்லை தோல்வியை சந்திக்குமா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் .