தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் இதனைத் தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் கிடைக்காததால் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி தனியார் பேருந்துகளில் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில் பயணிகளின் நலன் கருதி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுமார் 1,250 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரை போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று (செப்டம்பம் 15ஆம் தேதி) சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், நாளைய தினம் 200 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரிலிருந்து தமிழகத்தின் பிற இடங்களுக்கு 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோன்று செப்டம்பர் 19ஆம் தேதி திங்கள்கிழமை சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்பும் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் தேவைகேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப தேவைப்பட்டால் மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.