மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்களின் தலைநகரம், வை, கை என்று புராணங்களில் கூறப்பட்ட வளம் கொழிக்கச் செய்யும் வைகை ஆறு பாயும் நகரம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம், நித்தமும் திருவிழாக்கள் நடைபெறும் நகரம், தூங்கா நகரம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் நிறைந்த நகரம் என்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தமான மதுரையைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது மதுரை மக்களவை தொகுதி.
மதுரை கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு மற்றும் மேலூர் என 6 சட்டமன்ற தொகுதிகள் மதுரை மக்களவைத் தொகுதிக்குள் அடங்கி உள்ளன. இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்து 745 ஆகும். இவர்களில் ஆண்கள் 7 லட்சத்து 74 ஆயிரத்து 381 பேர். பெண்கள் 8 லட்சத்து2 ஆயிரத்து 176 பேர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 188 வாக்காளர்கள் உள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, சமயநல்லூர், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன. 2009ல் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் சமயநல்லூர் பிரிக்கப்பட்டு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு என இரண்டு புதிய தொகுதிகளாகியது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியுடன் சேர்க்கப்பட்டது.
தற்போது மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றங்களில் 4 தொகுதிகள் திமுகவிடமும், மேலூர் மற்றும் மதுரை மேற்கு தொகுதிகள் அதிமுக வசமும் உள்ளன.
இங்கு, முக்குலத்தோர், யாதவர் மற்றும் நாயக்கர் சமூக வாக்குகள் கணிசமாக உள்ளன. சிட்டியை பொறுத்த வரை சௌராஸ்டிரா சமூக வாக்குகள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் உள்ளன.
மதுரை மக்களவை தொகுதியின் வேட்பாளர்களாக, திமுக கூட்டணியில் மார்க்சிய கம்யூனிஸ்டை சேர்ந்த சிட்டிங் எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் களம் காண்கிறார். 2019 தேர்தலில் அதிமுகவின் ராஜ்சத்யனை விட 1 லட்சத்து 39 ஆயிரத்தி 395 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார் இவர்.
“மத்திய அரசுக்கு நான் எழுதிய கோரிக்கை கடிதங்கள்,தொகுதிக்கு ஆற்றிய காரியங்கள் ஏராளம். மாணவர்களுக்கு கல்விக்கடன், அரசுத்தேர்வுக்கு அவர்கள் தயார் செய்து கொள்ள பூங்காக்கள், பொதுமக்களுக்கு ரயில் திட்டங்கள் எல்லாம் நான் கொண்டு வந்ததுதான். நிறைய செய்யவேண்டும் என்னும் ஆசை உள்ளது. ஆனால், நான் சார்ந்த கட்சிக்கு பரம வைரியாக இருப்பது மத்தியில் ஆளும் பாஜக. ஆகவேதான், எனது தொகுதிக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியவில்லை. எய்ம்ஸ் பணிகள் தள்ளிப் போவதற்கும் அதுதான் காரணம்” என மத்திய அரசை சாடுகிறார் சு.வெங்கடேசன்.
அதிமுக சார்பில் இங்கு போட்டியிடுவது மதுரை மக்களிடையே ரொம்பவே பிரபலமான டாக்டர். சரவணன். 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். முதன் முதலில் மதிமுகவில் தனது அரசியல் பயணத்தை துவங்கி, அங்கிருந்து திமுக, பாஜக என கட்சிகள் மாறி, தற்போது அதிமுகவில் பயணிக்கும் டாக்டர் சரவணன்தான் அதிமுகவின் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர்.
பாஜக சார்பில் இங்கு போட்டியிடுவது, பேராசிரியர் ராம.சீனிவாசன். தமிழக பாஜகவின் மாநில செயலாளர் என்ற வகையில் பாஜகவினருக்கு அறிமுகமான அளவில் மக்களுக்கு அறிமுகம் இல்லை என்பது மிகப்பெரிய குறை.
இவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மதுரை மக்களவை களத்தில் வாக்கு வேட்டையாடி வருகிறார் மதுரை தியாகராயர் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசியரான முனைவர் சத்யா தேவி. கல்லூரி மாணவர்கள் மத்தியில் இவருக்கு அறிமுகம் இருக்கிறது.
இப்போது நமது ஐ தமிழ் நியூஸ் குழு எடுத்த சர்வே குறித்துப் பார்ப்போம். சட்டமன்ற தொகுதி வாரியாக எந்தக் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது? தொகுதி எம்.பியின் செயல்பாடு எப்படி? மக்களவை தொகுதியின் முக்கியப் பிரச்சனையாகப் பார்க்கப்படுவது எது என்பது குறித்த சர்வே முடிவு இதோ…
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
100 கோடி ரூபாய் செலவிட்டு தனது மகனுக்குத் திருமணம் நடத்தி வைத்ததாக பரபரப்புக்கு உள்ளான திமுக எம்.எல்.ஏவும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சருமான மூர்த்தியின் தொகுதியான இங்கு எடுக்கப்பட்ட சர்வேயில், 49 சதவீத வாக்காளர்கள் திமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 25 சதவீத வாக்காளர்கள் அதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கு 10 சதவீத வாக்காளர்களும், பா.ஜ.கவுக்கு 5 சதவீத வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சிட்டிங் எம்.பியின் செயல்பாட்டை பொறுத்தவரை 35 சதவிகித வாக்காளர்கள் சிறப்பாக உள்ளதாகவும், 38 சதவீத வாக்காளர்கள் சுமாராக உள்ளதாகவும், மோசம் என்று 27 சதவிகிதத்தினரும் கருத்துக் கணிப்பில் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி
கடந்த 2001 முதல் அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் முன்னால் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். இங்கு எடுக்கப்பட்ட சர்வேயில், அதிமுகவுக்கு 25 சதவீதம் வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் திமுகவுக்கும், 16 மற்றும் 14 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.க மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கும், 22 சதவீதம் வாக்காளர்கள் மற்ற கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மக்களவை எம்.பி. சு.வெங்கடேசனின் செயல்பாடு சுமாராக இருப்பதாக 37 சதவீதம் பேரும், சிறப்பாக இருப்பதாக 30 சதவீதம் வாக்காளர்களும், 33 சதவீத வாக்காளர்கள் மோசமாக உள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி
மன்னர் திருமலை நாயக்கர் மகால், மாரியம்மன் தெப்பக்குளம், அரசு ராஜாஜி மருத்துவமனை அமைந்திருக்கும் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி 2021 தேர்தலில் மதிமுக வேட்பாளர் பூமிநாதன் வசமாகி உள்ளது.
இங்கு நடத்தப்பட்ட சர்வேவேயில் திமுகவுக்கு அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது. 35 சதவீத வாக்காளர்கள் திமுகவுக்கு ஆதரவாகவும், தலா 19 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.க மற்றும் அதிமுகவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கு 18 சதவீத வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மதுரை மத்தி சட்டமன்ற தொகுதி
தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தொகுதி இது. 2-வதுமுறையாக எம்.எல்.ஏவாகி இருக்கும் பிடிஆர் தொகுதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், திமுகவுக்கு 37 சதவீதம் வாக்காளர்களின் ஆதரவு உள்ளது. அடுத்த இடத்தில் நாம் தமிழருக்கு 20 சதவீதத்தினரும், அதிமுகவுக்கு 17 சதவீத வாக்காளர்களும், பா.ஜ.க.வுக்கு 12 சதவீத வாக்காளர்களும், மற்ற கட்சிகளுக்கு 14 சதவீத வாக்காளர்களும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
எம்.பியின் செயல்பாட்டை பொறுத்தவரை இந்த தொகுதியில் சுமாராகவே இருப்பதாக, 76 சதவீத வாக்காளர்களும், 9- சதவீத வாக்காளர்கள் சிறப்பு என்றும், 15 சதவீத வாக்காளர்கள் மோசம் என்றும் சர்வேயில் தெரிவித்துள்ளனர்.
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி
மாவட்ட ஆட்சியரகம், உலக தமிழ்ச்சங்கம், அரசு சட்டக்கல்லூரி, மாவட்ட நீதிமன்றம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளடங்கிய மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி தற்போது திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி கைவசம் உள்ளது. கடந்த 2 தேர்தல்களில் அதிமுகவிடம் இருந்ததை தளபதி தட்டிப் பறித்ததாலோ என்னவோ, சர்வேயின் போது 37 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த்ள்ளனர். அதிமுக மற்றும் நாம் தமிழருக்கு தலா 20 சதவீதம் வாக்காளர்களும், பா.ஜ.கவுக்கு 11 சதவிகித வாக்காளர்களும் ஆதரவுதெரிவித்துள்ளனர். 12 சதவீத வாக்காளர்கள் மற்ற கட்சிகளுக்கு ஆதரவளித்துள்ளனர்.
மேலூர் சட்டமன்ற தொகுதி
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்றுகள் அடங்கிய மேலூர் சட்டமன்ற தொகுதி, கடந்த 2001 தேர்தல் முதல் அதிமுகவின் கைகளில் இருந்து வருகிறது. அதிமுகவின் ஆர்.சாமி 3 முறையும், அவரைத் தொடர்ந்து 2வது தடவையாக பெரியபுள்ளானும் எம்.எல்.ஏவாகி இருக்கின்றனர். இந்த தொகுதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் திமுகவுக்கு 37 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிமுகவுக்கு 27 சதவீத வாக்காளர்களும், பா.ஜ.கவுக்கு 15 சதவீத வாக்காளர்களும், நாம் தமிழர் கட்சிக்கு 10 சதவீத வாக்காளர்களும், அமமுகவுக்கு 11 சதவீத வாக்காளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக 17 சதவீதத்தினரும், 47 சதவீதம் வாக்காளர்கள் சுமார் என்றும், மோசம் என்று 36 சதவிகித வாக்காளர்களும் தெரிவித்துள்ளனர்.
மதுரை மக்களவை தொகுதியின் முக்கியப் பிரச்சனைகளில், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடங்குவதில்தாமதம் முதலிடத்திலும், வைகை குடிநீர் திட்ட மேம்பாடு இல்லாதது அடுத்த இடத்திலும் உள்ளது. சுற்றுலா மேம்பாடு மற்றும் தொழில்வளர்ச்சி இல்லாததும் பிரச்சனைகளின் பட்டியலில் உள்ளது.
ஐ தமிழ் நியூஸ் குழுவின் மதுரை மக்களவை தொகுதி சர்வே முடிவின் படி, 33 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் திமுக முதலிடத்திலும், அதிமுக 24 சதவீத வாக்காளர்களின் ஆதரவுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 13 சதவீத வாக்காளர்களும், 12 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.கவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளுக்கு 18 சதவீதத்தினர் ஆதரவு தெரிவிப்பதாக கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.
ஆக, தற்போதைய எம்.பி.யான சு.வெ. மீண்டும் மதுரை மக்களவை உறுப்பினர் ஆக வாய்ப்பு இருப்பதாகவே 10.04.2024 அன்றைய நமது கருத்துக் கணிப்பில் தெரிய வருகிறது.