20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதின. உலகக்கோப்பை தொடரில் நடைபெறும் கடைசி சூப்பர் 12 போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது 20 ஓவர் முடிவில் இந்தியா 186 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ராகுல் 50 ரன்னும், சூர்ய குமார் அதிரடியாக 4 சிக்சர்கள், 6 பவுண்டரி என 61 ரன்கள் சேர்த்தார். 187 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆடிய ஜிம்பாப்வே இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சால் சரிந்தது.
115 ரன்களுக்கே ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே, இதனால் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இந்த ஆட்டத்தில் 61 ரன்கள் குவித்த சூர்ய குமார் சர்வதேச t20 போட்டியில் புதிய சாதனையை நிகழ்த்தினார். ஒரு வருடத்தில் t20 போட்டிகளில் 1000 ரன்கள் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெயர் பெற்றார். நடப்பாண்டில் மொத்தம் 28 போட்டிகளில் விளையாடி 1026 ரன்கள் குவித்துள்ளார் சூர்ய குமார். மேலும் ஒரு வருடத்தில் சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 1000 ரன்கள் கடந்த இரண்டாவது வீரராவார் சூர்ய குமார்.
இந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் முதல் இடம் பிடித்துள்ளார். சென்ற ஆண்டில் மட்டும் 29 போட்டிகளில் விளையாடி 1326 ரன்கள் அடித்துள்ளார். சிறப்பாக ஆடும் சூர்ய குமார் அணிக்கு தேவையான ஸ்கோரை அதிரடியாக குவிப்பதோடு, எதிரணி பந்து வீச்சாளர்களை தனது தனித்துவமான ஷாட்டின் மூலம் கலங்கடிக்கிறார்.
இவரது சிக்சர் அடிக்கும் விதம், ஸ்டைல் அனைத்தும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஜாம்பவான் வீரர் ” டி வில்லியர்ஸ்” போன்று இருப்பதால் , இவரை இந்திய அணியின் ” AB DE Villiers ” என்றும் பல கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடதக்கது.