கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் பள்ளிக்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 22-ந் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. வெளுத்து வாங்கிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் வீடுகள், தெருக்கள், வயல்கள் என மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர் கொண்டு வருகிறனர்.
4 மாவட்டங்களிலும் இன்று காலை சற்று மழை குறைந்துள்ளது.
இதனால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீட்புப் பணிகளில் இன்று காலை முதல் கூடுதல் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது.
கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.