தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தமிழகத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பள்ளிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி, இறைவணக்கம் கூட்டம், உடற்கல்வி பாடவேளை உள்ளிட்டவற்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டன.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு உத்தவிவிட்டது. அதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதை அடுத்து பள்ளிகளில் இறை வணக்கக் கூட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
அதன்படி பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் அனுமதி வழங்கி உள்ளார்.
பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.