குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஆசிரியர் பணி நியமனத்திற்கு ஒருவர் குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் (TNTET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) இரண்டு தாள்களைக் கொண்டது.
முதல் தாள்: ஆசிரியர் பயிற்சி, பட்டயப் படிப்பு (1 முதல் 5ம் வகுப்பு வரை)
இரண்டாம் தாள்: கல்வியியல் பட்டம் (1 முதல் 8ம் வகுப்பு வரை)
என இரண்டு தாள்களை எழுத வேண்டும்.
2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், தொடர்ந்து அதற்கான தேர்வு 2024ல் மார்ச் மாதம் நடைபெற தகவல் வெளியிடப்படும் என்றும், ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2023ம் ஆண்டு தேர்வுக்கான தேர்வு திட்ட அட்டவணையை தமிழ்நாடு ஆசிரயர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அந்த அட்டவணையின் படி, 2023ல் 4000 உதவி பேராசிரியர்கள், 6,553 இடைநிலை ஆசிரியர்கள், 3,587 பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 15,149 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னதாக தமிழ்நாட்டில் 2013, 2017, 2019 என 3 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு, வெளியிடப்பட்ட தேர்வு திட்ட அட்டவணையில், ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட்/செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தாள் – I ற்கான தேர்வு மட்டும் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தாள்- II ற்கான தேர்வு குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
இதையடுத்து, தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட தேர்வு அட்டவணையில், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் வெளியாகும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முன்னதாக கணினி வழி தேர்வாக நடைபெற்ற தாள் -I ல் 1,53,233 பேர் பங்கேற்ற நிலையில், அதில் 21,543 பேர் அதாவது, தேர்வெழுதியவர்களில் வெறும் 14% பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.