தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற 11ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தேர்வில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்டு நிறைவடைந்தது.
மொத்தம் 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கி முடிவடைந்த நிலையில், 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 20 ஆம் தேதி ஒரே நாளில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 11ம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் நடைபெற்ற 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை 8,83,882 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் ஜூலை 7-ந் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதை அடுத்து 27 ஆம் தேதி காலை முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கபட்டது.
அதன் படி 11ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில், 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களைப் பார்க்க முடியும். அதேநேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது பள்ளியில் தாங்கள் கொடுத்த செல்போன் எண்ணுக்கும் பிளஸ் 1 மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும்.