அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கு (cases) குறித்து, மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்வோம் என அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து, அதிமுகவின் தேர்தல் பிரிவு துணை செயலாளரும், வழக்கறிஞருமான இன்பதுரை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது பேசிய அவர், தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் குறித்து அவதூராகவும், குடிபோதையிலும் செல்போனில் காணொளி பதிவு செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
குற்றம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யாமல், பாதிக்கப்பட்டவர் மீது வழக்கு பதிவு (cases) செய்வது என்பது காவல்துறையின் வேடிக்கையான செயல் என்றும் இன்பதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களது தனி பாதுகாவலர், தன் கடமையை சரியாக செய்தார் என்றும், கடமையை செய்த காவல்துறை அதிகாரி மீது காவல்துறை வழக்கு போட்டு இருப்பது ஒட்டுமொத்த காவல்துறையினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கே விமான நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லை என்றால் மற்றவர்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பயணிக்கும் பேருந்தில் முன் அனுமதி இல்லாமல் செல்போனில் படம் எடுத்தது முதல் குற்றம் என்று கருதி உடனடியாக காவல்துறையினர் தவறிழைத்தவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதலமைச்சர் புகார் அளக்கவில்லை என காரணம் கூறி, பாதிக்கப்பட்டவர் மீதும், தவறு செய்ய முற்பட்ட ஒருவரின் செயலை தடுத்த எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாவலர் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பது என்பது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசின் இந்த செயல்பாட்டை மக்கள் மன்றத்தின் முன் கொண்டு செல்வோம் என்றும், நடைபெற உள்ள பேரவை கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் எதிரொலிக்கும் என்றும் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.