விசாரணையின்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது என அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரித்தார். அப்போது இருதய பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பக்கூடாது என அவரது தரப்பு வழக்கறிஞர் அருண் கோரிக்கை விடுத்தார் . இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை மருத்துவமனையிலேயே வைத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்திக்கொள்ளலாம் என்றும், மீண்டும் ஜூன் 23ம் தேதி செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார் .
இதுமட்டுமல்லாமல் அமலாக்கத்துறைக்கு மேலும் சில நிபந்தனைகளையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்துள்ளது :
இருதய பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில்பாலாஜியை வெளியே அழைத்துச் செல்லக்கூடாது. செந்தில் பாலாஜியின் உடல்நிலை, அவரது சிகிச்சைக்கு எந்த இடையூறும் இல்லாமல் விசாரிக்க வேண்டும்.
போதிய உணவு, இருப்பிடம் வழங்க வேண்டும், மூன்றாம் தர விசாரணை முறையை பயன்படுத்தக்கூடாது, இவை அனைத்தையும் விட முக்கியமானது செந்தில் பாலாஜியை துன்புறுத்தவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ கூடாது, காவலின்போது மருத்துவ ஆலோசனைக்கு உட்பட்டு செந்தில் பாலாஜியை பார்க்க குடும்ப உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும்.
அமைச்சர் பொறுப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி காவலில் இருக்கும்போது அவருக்கு தேவையான பாதுகாப்பை முறையே வழங்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய நிபந்தனைகளை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு விதித்துள்ளது.