இந்த ஆண்டின் கடைசி மற்றும் இரண்டாவது சந்திர கிரகணம் (lunar eclipse) நவம்பர் 8 ஆம் தேதி நிகழ உள்ளதாக நாசா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு முழு சந்திர கிரகணம் ஏற்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவியல் ரீதியாக, சந்திர கிரகணத்தின்போது சந்திரனின் மேல் பூமியின் நிழல் காணப்படுவதால் அது இரத்தம் கலந்த சிவப்பு நிறமாகத் தெரிகிறது.
சந்திர கிரகணத்தைப் பார்க்க, சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவைபடாது. சந்திர கிரகணத்தை நேரடியாகவே வெறும் கண்களால் பார்க்க முடியும்.
தொலைநோக்கியியை பயன்படுத்தி சந்திர கிரகணத்தை (lunar eclipse) தெளிவாகப் பார்க்கலாம்.
நேரடியாகப் பார்க்க முடியாதவர்கள், நாசா உள்ளிட்ட பிற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் வெளியிடும் நேரலை வீடியோக்களையும் பார்க்கலாம்.
மேலும், ஆன்மீக ரீதியாக கிரகண நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்படும். கிரகண நேரம் சந்திரன் வானில் உதயமாகும் நேரம் 5.36 தொடங்கி மாலை 6.20 வரை நீடிக்க உள்ளது.
இந்த நாளில் சந்திரகிரகணம் நிகழ இருப்பதால் கோவில்களில் நடைசாத்தப்பட உள்ளது.
இந்த கிரகணம் நவம்பர் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 வரை நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை நவம்பர் 8ம் தேதி காலை 8.40 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. அதன் பின்னர் இரவு 7.20 மணிக்கு திறக்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 11 மணி நேரம் கோவில் மூடப்படுகிறது.
கோவில் நடை சாத்தப்படுவதால் அங்கு விஐபி தரிசனம், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கான விஐபி தரிசனமான ரூ.300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட்,
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகள் ஆகியவை 11 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர்கள், வெளிநாட்டு இந்தியர்கள், பாதுகாப்பு பணியாளர்களுக்கான சாமி தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களுக்கும் 11 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்திரகிரகணம் நிறைவடைந்த பிறகு இலவச தரிசனத்தில் மட்டுமே வைகுண்ட வளாகம் 2ல் இருந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கிரகண காலத்தில் சமையல் செய்யக்கூடாது என்பதால் அன்னபிரசாத கூடமும் கிரகணம் முடியும் வரை செயல்படாது. இது குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் திட்டமிட்டு கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.