திருவள்ளூர் மாவட்டத்தில் பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திய சக நண்பர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொலைபேசியில் பப்ஜி வீடியோ கேம் விளையாடுவது இளைஞர்களின் அண்மைக்கால நடவடிக்கையாக மாறி உள்ளது. குறிப்பாக ஊரடங்கு நாட்களுக்கு பின் குழந்தைகளுக்கு ஆன்லைன் விளையாட்டுகள் பெரிய பொழுது போக்காக மாறியுள்ளன.
இது போன்ற ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகும் சிறுவர்கள் உணவு, தண்ணீரை கூட மறந்து விளையாட்டின் மோகம் காரணமாக பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இந்த விளையாட்டில் ஏற்படும் தோல்வி காரணமாக பல சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில் பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் நண்பனை சகநண்பர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாகத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் பக்கத்து வீட்டு நண்பரான அஜித்குமார் என்பவருடன் பப்ஜி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே கோஷ்டி மோதலாக மாறியது.இதனால் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் நால்வரை கைது செய்தனர். பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் நண்பனையே கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் உயிரைப் பறிப்பதால் அரசு அந்த விளையாட்டுகளை கடுமையாக தடை செய்து, யாருமே விளையாடதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.