கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான நிலச்சரிவின் காரணமாக அப்பகுதியில் தற்போது மிக மோசமான பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டி உள்ளதால் எத்திசையிலும் அழுகுரல்கள் கேட்டவாறு உள்ளது.
இதில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இந்த பாதிப்பு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலான சாட்டிலைட் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அப்பகுதியில் பாதிப்பு எந்தளவு மோசமாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள இந்த சாட்டிலைட் படங்கள் நமக்கு உதவும்.. பாதிப்புகள் மிக மோசமாக இருப்பதால் மீட்புப் பணிகள் மெதுவாகவே நடந்து வருகிறது. சுமார் 86,000 சதுர மீட்டர் நிலப்பரப்பு இருவைப்புழா ஆற்றின் குறுக்கே 8 கிலோமீட்டர் தூரத்திற்குச் சரிந்துள்ளது.
இந்தச் சூழலில் தான் ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) இஸ்ரோவின் மேம்பட்ட கார்டோசாட்-3 ஆப்டிகல் சாட்டிலைட்டை கொண்டு இந்த நிலச்சரிவு குறித்த முக்கிய படங்களை எடுத்துள்ளது. இந்த சாட்டிலைட்டால் மேகங்களை ஊடுருவிப் படத்தை எடுக்க முடியும் என்பதால் பேரழிவு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர இது உதவுகிறது.
1500 மீட்டர் உயரம்: அங்குக் கனமழை கொட்டிய நிலையில், அதன் காரணமாகவே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 1,550 மீட்டர் உயரத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், அது ஆற்றின் போக்கை மாற்றி இருக்கிறது. மேலும், ஆற்றை விரிவுபடுத்தி இருக்கிறது. இதனால் கரையோரங்களில் இருந்த வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
Also Read : ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை மெட்ரோவில் இத்தனை பேர் பயணம் செய்தார்களா..?
இது தொடர்பாக கொச் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (குசாட்) வளிமண்டல ரேடார் ஆய்வுக்கான மேம்பட்ட மையத்தின் இயக்குநர் எஸ் அபிலாஷ் கூறுகையில், “காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் முழுக்க தீவிர கனமழை பெய்தது. கடந்த இரண்டு வாரங்களாகவே இப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.
என்ன காரணம்: தொடர்ந்து மழை பெய்ததால் மண் பலவீனமடைந்தது. இந்தச் சூழலில் திங்கள்கிழமை அரபிக்கடலில் கரையோரத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. இதுவே நிலச்சரிவுக்குக் காரணமாகும்” என்றார்.
அதே இடத்தில் ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதையும் நம்மால் பழைய சாட்டிலைட் படங்களில் பார்க்க முடிகிறது. எனவே, இந்த இடம் அடிக்கடி நிலச்சரிவால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. சூரல்மாலா நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெய்த தீவிர கனமழையே இந்த நிலச்சரிவுக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
பேரழிவு: இந்த நிலச்சரிவின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.. பல கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, விமான படை என பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாதிப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும் அதிகாரிகள் இப்போது மதிப்பிட்டு வருகிறார்கள்.
இந்த செயற்கைக்கோள் படங்கள் மீட்புப் பணிகளுக்கு உதவுவது மட்டுமல்லாமல், இனி வரும் காலத்தில் என்ன மாதிரியான புவியியல் பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் புரிந்து கொள்ள உதவும். மேலும், வரும் காலத்தில் நாம் இயற்கை பேரிடரை எதிர்கொள்ளத் தயார் நிலையில், இருக்கவும் இது உதவும்.