தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரி சைலேஷ்குமார் யாதவுக்கு (shailesh kumar yadav) பதவிவுயர்வு வழங்குவதா? அதிமுகவோடு சேர்த்து திமுகவும் வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் மண்ணின் மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 14 பேரைக் கொன்றொழித்த விவகாரத்தில், அருணா ஜெகசதீசன் ஆணையத்தால் நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளுள் ஒருவரான சைலேஷ்குமார் யாதவுக்கு பதவியுயர்வு வழங்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
அப்பாவி மக்களைக் கொன்றுகுவித்த குற்றவாளிகளைக் கூண்டிலேற்றி, அவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதியளித்து ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்டு, இன்றைக்கு அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தாமிர ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் சைலேஷ்குமார் யாதவுக்கு (shailesh kumar yadav) உள்ளிட்ட காவல்துறையினரால் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டனர் என்பதை அருணா ஜெகதீசன் ஆணையம் தோலுரித்துக்காட்டி, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைத்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எவ்வித முன்நகர்வையும் செய்யாத திமுக அரசின் செயல் வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும்.
17 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்தும், இதுவரை ஒருவர் மீது கூட குற்றவியல் நடவடிக்கை எடுக்காத திமுக அரசின் செயல் வெளிப்படையான மோசடித்தனம் இல்லையா? அவசரநிலை காலக் கட்டத்தில் காவல்துறையினரால் தான் துன்புறுத்தப்பட்டதை இன்றளவும் பேசும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கடந்த அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானவர்களின் குடும்பத்துக்கு நியாயத்தைப் பெற்றுத்தர மறுப்பதேன்?
எந்தக் காவல்துறை அதிகாரி, மக்களின் சாவுக்குக் காரணமானவர்களுள் ஒருவரென அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சுமத்தியதோ அதே அதிகாரிக்கு திமுக அரசு பதவியுயர்வு வழங்குகிறதென்றால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்துகிறதா திமுக அரசு?
துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அதிமுக அரசின் ஆட்சியாளர்கள்வரை எல்லோர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தான் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களின் குரலாக இருக்கும்போது, அதற்கு முற்றிலும் நேர்மாறாக செயல்படும் திமுக அரசின் நிர்வாகச் செயல்பாடு அப்பட்டமான மக்கள் விரோதமாகும்.
காவல்துறையினரை ஏவிவிட்டு மக்களைக் கொன்றுகுவித்த அதிமுக அரசுக்கும், கொலையாளிகளென்று தெரிந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் திமுக அரசுக்கும் என்ன வேறுபாடு? மாநில அரசின் கைகளிலே அதிகாரமிருந்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இருந்தும், அதனை செய்வதற்குரிய ஆதரவு மக்களிடமிருந்தும் விடாப்பிடியாய் செய்ய மறுத்து கொலையாளிகளைக் காப்பாற்றுவது ஏன் முதல்வரே?
அதிமுகவோடு நாளும் வார்த்தைப்போர் செய்து, லாவணிச்சண்டை போடும் திமுக, அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்த பெருங்குற்றத்திற்கு நீதியைப் பெற்றுத் தர மறுப்பது வெட்கக்கேடு இல்லையா? இதுதான் நீங்கள் பேசும் சமூக நீதியா முதல்வரே? இதுதான் நீங்கள் தருவதாகக் கூறிய விடியல் ஆட்சியா?
திமுகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கூறுவோரைக்கூட வழக்குத்தொடுத்து கைதுசெய்து சிறைப்படுத்தும் திமுக அரசு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய கொலையாளிகள் மீது வழக்குத் தொடுக்க மறுத்து அவர்களைக் காப்பாற்றி வருவது ஏற்கவே முடியாதப் பேரவலமாகும்.
ஆகவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களைத் துள்ளத் துடிக்கப் பச்சைப்படுகொலை செய்திட்ட காவல்துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி, சட்ட நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
மாறாக, அதனை செய்ய மறுத்து, மக்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற துணைபோனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு எனும் அரசப்பயங்கரவாத நடவடிக்கையில், அதிமுகவோடு சேர்த்து திமுகவும் வரலாற்றுப்பழியை சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.