தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
காய்ச்சல் காரணமாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் ஓய்வெடுத்து வந்த முதல்வர் ஸ்டாலின், உடல்நலம் தேறியுள்ளதால், இன்று தலைமை செயலகம் வருகிறார். அங்கு, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டைகளை, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள், புதிய தொழில்களுக்கு அனுமதி அளிப்பது, மேகதாது அணை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு உடனடியாக சட்டம் கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.