இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய திரைப்படங்களின் இயக்குநரும், பிரபல நடிகருமான மாரிமுத்து அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும். அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தேனி மாவட்டத்தில் இருந்து சினிமா கனவுகளுடன் சென்னை வந்து, பல்லாண்டுகள் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து, இயக்குநர் ஆனவர் மாரிமுத்து .
ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து. யதார்த்தமான நடிகராகவும் பாராட்டப்பட்டவர். மேலும், சின்னத்திரையிலும் தனது. நடிப்புத் திறனால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு இல்லத்திலும் அறிமுகமானவராகப் புகழ்பெற்றார். மேலும், பல நேர்காணல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவரது பேச்சுகள். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மாரிமுத்துவின் மறைவு தமிழ்த்திரையுலகுக்கு நிச்சயம் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தனது ட்விட்டர் பக்கத்தில் மாரிமுத்துவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிருப்பதாவது :
திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பதிவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.