சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஏற்பட்ட சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது :
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், சின்னக்கவுண்டனூர் கிராமம் அருகே இன்று (6-9-2023) அதிகாலை சேலத்திலிருந்து பெருந்துறை நோக்கிச் சென்ற கார், சேலம் – கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாக்கவுண்டனூர் பைபாஸ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது .
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், காவேரிபாளையத்தைச் சேர்ந்த திரு.செல்வராஜ், (வயது 55), ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், ஈங்கூர், குட்டப்பாளையத்தைச் சேர்ந்த திரு.பழனிசாமி (வயது 50), திருமதி.பாப்பாத்தி, (வயது 45), திரு.ஆறுமுகம், (வயது 45), திருமதி.மஞ்சுளா, (வயது 40), மற்றும் சேலம், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த திரு.ராஜதுரை என்பவரின் ஒரு வயது பெண் குழந்தை சஞ்சனா ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் காயமடைந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் திரு.விக்னேஷ் மற்றும் திருமதி.பிரியா ஆகிய இருவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.