தேர்தல் வாக்குறுதியாக தமிழ்நாட்டில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தற்போது முதலமைச்சர் இருக்கையை அலங்கரித்து வரும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன்படி மக்களின் அமோக ஆதரவை பெற்று தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் விடுபட்டவர்கள், ஏற்கெனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டதால் மேல் முறையீடு செய்தவர்கள் என 11.85 லட்சம் விண்ணப்பங்கள் தமிழக அரசால் பரிசீலிக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய பயனாளிகளுக்கு இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நவ.10-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார் .
பின்னர் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
என்னால் மக்களை சந்திக்காமல் இருக்க முடியவில்லை ; அதனால் உங்களை சந்திக்க வந்துள்ளேன் காய்ச்சல் குணமாகி இருந்தாலும் தொண்டை வலி இன்னும் சரியாகவில்லை; தொண்டை வலியை விட தொண்டில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதால் வந்துவிட்டேன்.
மகளிர் உரிமைத் திட்ட வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்ற முடியாது எனக்கூறினார்கள்; வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம்
மகளிர் உரிமைத் திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது; பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது . மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டி வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 57,000 அதிகாரிகள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முறை 7.35 லட்சம் மகளிர் புதிய பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உரிமைத் தொகை நேற்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது.
கலைஞர் உரிமை திட்டத்தில் புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் 1 கோடியே 14 லட்சம் பேர் இத்திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். தகுதியுள்ள அனைவருக்கும் இத்திட்டம் சென்று
சேரும் வரை இதற்கான பணி தொடரும்.
நவம்பர் மாதத்திற்காக கலைஞர் உரிமை தொகை ரூ.1000 இன்று மாலைக்குள் வரவு வைக்கப்படும். பலர் முடியாது என கூறிய இந்த திட்டத்தை இன்று வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.