சிறைக்கைதிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கும் முழு அதிகாரம் அரசுக்கு தான் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை அனுபதவித்து வரும் தனது கணவருக்கு 40 நாள் பரோல் விடுப்பு கோரி அவரின் மனைவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிறைக்கைதிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கும் முழு அதிகாரம் அரசிடம் தான் உள்ளது எனவும் சிறைக்கைதிகளுக்கு பரோல் விடுப்பை தங்களுக்கான சட்ட ரீதியான உரிமையாக கோர முடியாது எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது ஏற்கனவே ஆயுள் தண்டனைக்கு எதிரான மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால், அவருக்கு பரோல் வழங்க முடியாது என அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பரோல் விடுப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த மனு மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் பரோல் கேட்கும் மனுக்களின் மீது சிறைத் துறை டிஐஜி தான் முடிவெடுக்க முடியும் என்றும் பரோல் கேட்கும் மனுதாரரின் மனுவை சிறைத்துறை டிஐஜி மீண்டும் 4 வாரத்தில் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர் .
மேலும் இந்த பரிசீலனைக்கு மேல்முறையீடு மனு நிலுவையில் இருப்பதை கருத்தில் கொள்ளத்தேவையில்லை எனவும் நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.