தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளதால் அசம்பாவிதங்களை தவிர்க்க அம்மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க , கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநில எல்லைவரை மட்டுமே தமிழ்நாடு பதிவெண் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
சுமார் 2 ஆயிரம் கன்னட அமைப்பினர் இன்றைய பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக வட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். அதுதவிர, பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் முடங்கும் எனவும், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்படும் எனவும் வட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகா முழு அடைப்பிற்கு ஓலா, உபர் ஓட்டுநர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளதால், போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்த் என்ற பெயரில் அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றால் பந்த் நடத்துபவர்களே முழு பொறுப்பு என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் நாளை பணிக்கு வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.