சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சமையலில் மிகவும் முக்கிய ஒன்றான தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக உச்சத்தில் உள்ளது. வழக்கமாக கிலோவிற்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை, 150 ரூபாய்க்கும் மேல் அதிகரித்துத்துள்ளது.
நாடு முழுவதும் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்த வரையில் நேற்று 140 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது.
விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன் தக்காளி விலை 90 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் படி நேற்று மொத்த விற்பனை விலையில் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி, இன்று 10 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எனவே தக்காளி மற்றும் சின்ன வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.