தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் சரிந்துள்ளது.
நாடு முழுவதும் பெய்த தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தக்காளி விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்தது. இதன் காரணமாக கடந்த ஒரூ மாதமாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி அளித்தது.
குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை 180 விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக பண்ணை பசுமை கடைகள், ரேசன் கடைகளில் தக்காளி சுமார் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் போதுமான அளவு தக்காளி மக்களுக்கு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து வெளிக்கடைகளில் போது மக்கள் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தக்காளி விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக குறைந்து வருகிறது. தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளியின் விலை மேலும் சரிந்துள்ளது.
அதன் படி கோயம்பேடு சந்தையில் முதல் தர தக்காளி இன்று ஒரு கிலோ ரூ.20 குறைந்து ரூ.70க்கும், இரண்டாம் தரம் ரூ.60க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் விளைந்துள்ள தக்காளி சென்னை கோயம்பேடு சந்தைக்கு விற்பனைக்கு வரத்தொடங்கி உள்ளதோடு, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து ஓரளவுக்கு அதிகரித்து இருப்பதால், தக்காளி விலை குறைந்துள்ளதகாகவும், மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.